முன்கூட்டியே வீட்டுக் கடனை அடைப்பது நல்லதா? தெரிஞ்சுக இதை படிங்க…

 

வங்கியில் வீட்டுக் கடன் வாங்குகிறீர்கள். பெரும்பாலும் தொடக்கத்தில் மாதத் தவணை என்பது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும். ஏற்கெனவே இருக்கும் செலவுகளுடன் இதுவும் பெரிய செலவாக நம் பட்ஜெட்டில் துண்டு விழச் செய்யும். சில வருடங்களுக்குப் பிறகு, இது இயல்பாகிவிடும்.

மேலும் சில வருடங்களுக்குப் பிறகு நம் ஊதிய உயர்வு போன்ற காரணங்களால் குறிப்பிட்ட மாதத் தவணைகளைவிட சிறிது அதிகமாகவே கட்ட முடியும் என்கிற நிலை ஏற்படும். ஒரு கட்டத்தில் கையிருப்பைக் கொண்டு குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே வீட்டுக் கடனை முழுவதுமாக அடைத்து விடலாம் என்று தோன்றக் கூடும்.

இந்த நிலையில் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய, கோணங்கள் உண்டு.

1.. வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு வருமானவரி விலக்கு உண்டு. இது ஒருபுறம். மறுபுறம் முன்னதாகவே வீட்டுக் கடனை அடைப்பதால் நமக்குச் சேமிப்புத் தொகையாக மிஞ்சும் வட்டிப் பணம். இந்த இரண்டில் எது அதிகம், எது குறைவு என்று யோசித்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்.

2.. முன்பெல்லாம் ஒப்பந்த காலக் கட்டத்துக்கு முன்பாகவே வீட்டுக்கடனை முழுவதுமாகச் செலுத்தினால் அதற்கென்று ஓர் அபராதத் தொகையை நாம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படிக் கிடையாது. விரைவாக வீட்டுக் கடனைச் செலுத்தி முடிப்பதில் வேறொரு வசதி உண்டு. மற்றொரு வீடு வாங்குவதற்கான வங்கிக் கடனை நீங்கள் பெற முடியும். (ஏற்கெனவே ஒரு வீட்டுக் கடன் இருக்கும்போது உங்களுக்கு மற்றொரு வீட்டுக் கடனை வழங்கப் பெரும்பாலான வங்கிகள் முன்வராது).

3.. முதல் வீட்டுக் கடன் முழுவதும் அடைத்துவிட்டு அந்த வீட்டையும் வங்கிக்கு அடமானமாக அளித்தால் இரண்டாவது வீட்டுக் கடன் அதிகத் தொகைக்கு அளிக்கப்படும் வாய்ப்பு உண்டு. வீட்டுக் கடன் வாங்கி ஐந்திலிருந்து பத்து வருடங்கள் ஆகும் நிலையில் வீட்டுக் கடனை முன்னதாகவே அடைப்பது பற்றி நீங்கள் தீர்மானித்துவிட முடியும். உங்கள் சேமிப்பை வங்கியின் சேமிப்புக் கணக்கில்தான் வைத்திருக்கப் போகிறீர்கள் அல்லது வங்கி வைப்பு நிதியில் போடப் போகிறீர்கள் என்றால் அவற்றில் கிடைக்கும் வட்டி என்பது குறைவாகவே இருக்கும்.

ஆனால் வீட்டுக் கடனுக்கான வட்டி நிச்சயம் இதைவிட அதிகமாக இருக்கும். எனவே மாதத் தவணையைக் குறிப்பிட்டதைவிட அதிகமாகவே நீங்கள் செலுத்தத் தொடங்குவது நல்லது. இது பின்னர் வீட்டுக் கடனை முன்னதாகவே முழுமையாகச் செலுத்துவதற்கு வசதியாக இருக்கும்.

4.. இதன் மற்றொரு கோணம் உங்கள் சேமிப்பு மற்றும் வைப்பு நிதியில் போட்ட தொகையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற முடியும். ஆனால் வீடடுக் கடனைப் பொருத்தவரையில் வங்கியிடம் ‘தவணைத் தொகையைவிட அதிகமாகவே நான் கட்டியிருக்கிறேன். எனவே எனக்கு அந்த அதிகப்படித் தொகையைத் திருப்பிக் கொடுங்கள். இப்போது அதற்குத் தேவை வந்திருக்கிறது’ என்று நீங்கள் கேட்க முடியாது.

எனவே உடனடியாகச் சில வருடங்களுக்கு எந்தப் பெரிய செலவும் இல்லை எனும் நிலையில்தான் நீங்கள் தவணைத் தொகையை அதிகரித்துக் கட்டுவதும், வீட்டுக் கடனை முன்னதாகவே முழுவதுமாகச் செலுத்துவதும் புத்திசாலித்தனம்.

Scroll to Top