பதிவுத் துறையில் தாய்ப் பத்திரம் (Parent Document) எந்த ஆண்டிலிருந்து கிடைக்கும்???

british stamp paper india

(ஒரு ஓய்வு பெற்ற பதிவாளரின் பதிவு. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.)

தற்பொழுது நீங்கள் வாங்கப் போகும் சொத்திற்கு தாய்ப் பத்திரங்கள் அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு தாய் பத்திரம் 2010-ல் உருவாக்கப்பட்டது. அதனுடைய தாய் பத்திரம் 2003-ல் உருவாக்கப்பட்டது. அதனுடைய தாய் பத்திரம் 1995-ல் உருவாக்கப்பட்டது.

இப்படி தாய்ப் பத்திரங்கள் ஆண்டுகள் பின்னோக்கிப் போய் கொண்டே இருக்கும்.

இப்படி ஆண்டுகள் பின்னோக்கி போய்க் கொண்டே இருக்கின்ற தாய்ப் பத்திரங்களுக்குப் பின்னோக்கிய ஏதாவது ஒரு ஆண்டில் முற்றுப் புள்ளி இருக்கும் அல்லவா? அதனைப் பற்றி பார்ப்போம்.

1800க்கு முன்பு இந்தியாவில் யாருக்குமே இந்த நிலம் எனக்கு உரிமையானது என்று பட்டாவும் கிடையாது. பத்திரமும் குடியானவர்களுக்கு கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1800-களுக்கு முன்பு ஜமீன்கள், ஜாகீர்கள், சௌத்திரிகள், குரோரிகள் போன்றவர்களுக்கு செப்பேடுகளாக, ஓலைச்சுவடிகளாக, தங்க பட்டயங்களாக கூட நிலத்தின் மீதான மேல் வாரி உரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் இப்பொழுது இருப்பது போல முத்திரைத் தாள் பத்திரங்கள் கிடையாது.

1800-களுக்கு முன்னாள் அரசு நிர்வாகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கின்ற வருவாய் துறை ஊழியர்களான கர்ணம், ஜேம்ஸ்பாண்டு, மஜும்தார், பவுஸ்தார் போன்றவர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக இந்த கிராமங்களின் மேல்வாரி உரிமையை இனாமாக அரசு கொடுத்திருக்கும் அந்த இனாம் உரிமைக்கான பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் மூலமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு இப்பொழுது இருப்பது போல முத்திரைத்தாள் பத்திரங்கள் கிடையாது.

1800 களுக்கு முன்பு சமஸ்கிருத வேதம் படிக்கின்ற பிராமணர்களுக்கு ஸ்தோத்திரியம் என்றும், மசூதிகளில் இருக்கின்ற ஹாஜிக்களுக்கும் சில கிராமங்களின் மேல்வாரி உரிமையை இனாமாக பட்டயங்கள் மூலமும், ஓலைச்சுவடிகள் மூலமும் அரசு கொடுத்திருக்கும். அதற்கும் இப்பொழுது இருப்பது போல முத்திரைத்தாள் பத்திரங்கள் கிடையாது.

1800-களுக்கு முன்பு கிராமத்தில் வேலை செய்கின்ற வெட்டியான்கள், தச்சர்கள், நாவிதர்கள், கருமான்கள், கிராமகோவில் பூசாரிகள் ஆகியோர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக மேல்வாரி உரிமை உள்ள சிறு அளவிலான நிலங்கள் அந்தந்த கிராமத்திற்குள்ளேயே இனாமாக கொடுக்கப்பட்டது.

அதனுடைய விவரங்கள் எல்லாம் 1800-களுக்கு முன்னாள் பராமரிக்கப்பட்ட கர்ணம் பதிவேடுகளில் இருக்கிறது.

1800-க்கு பிறகு தான் காரன் வாலீஸ் பிரபு காலத்திற்கு பிறகு சாஸ்வத செட்டில்மெண்ட் (PERMANENT SETTLEMENT)-ற்கு பிறகு அனைத்து குடியானவர்களுக்கும் இந்த நிலம் உனக்கு தான் என்ற நிரந்தர பட்டா வழங்கப்பட்டது.

ஆக 1800-க்கு முன்பு வரை எந்த ஒரு குடியானவருக்கும் இந்த நிலம் உனக்கு தான் என்ற பட்டாவே இல்லாதபோது செப்பேடுகளோ, ஓலைச்சுவடிகளோ, பட்டயங்களோ இருப்பதற்கு வாய்ப்பில்லை.

அதே போல முத்திரைத் தாள் பதித்த பத்திரங்களும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

1800-க்கு பிறகு தான் குடியானவர்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டதால் அவர்கள் அதனை பிற குடியானவர்களுக்கு கிரையம் கொடுப்பதற்கும், தானம் அளிப்பதற்கும், பாகப் பிரிவினை செய்வதற்கும், இன்னும் பிறவகையான பத்திரங்களை போடுவதற்கும் அவசியம் ஏற்பட்டது.

அதனால் 1840-களில் கல்கத்தாவில் முதன் முறையாக பத்திரப்பதிவு உருவாக்கப்பட்டது. நம் தமிழ்நாட்டில் 1865-களில் பத்திரப்பதிவு உருவாக்கப்பட்டது.
ஆக தமிழ்நாட்டில் குடியானவர்களுக்கு பழைய பத்திரம் வைத்திருந்தால் கண்டிப்பாக 1865-க்கு முன்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை.

எனவே இன்று இருக்கும் எல்லா சொத்துக்களுக்கும் தாய்ப் பத்திரங்கள் பெரும்பாலும் பின்னோக்கி சென்றால் 1865-யோடு முடிந்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சரி 1865-க்கு முன்னாள் சில பத்திரங்கள் இருக்கிறது என்றால் நன்கு ஆராய்ந்து பார்த்தால் அது குடியானவர்களுடைய பத்திரங்களாக இருக்காது. ஒரு ஜமீன்தாரரோ அல்லது ஒரு இனாம் தாரரின் மேல்வாரி உரிமை சம்மந்தப்பட்ட பத்திரங்களாக இருக்கும். அந்த பத்திரங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் பதிந்தவைகளாக இருக்கும், ஏனென்றால் அப்பொழுது சார்பதிவகம் என்று ஒன்று இல்லவே இல்லை.

1793 முதல் 1865 வரை நீதிமன்றத்தில் இருக்கின்ற திவான் இ அதாலத் என்ற நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் தான் மேற்படி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது.

ஆக சார் பதிவகத்திற்கு முன்பு நீதிமன்றம் தான் பதிவு அலுவலகமாக இருந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக 1865-க்கு பிறகு தான் குடியானவர்களுடைய நிலங்களுக்கான பத்திரங்கள் பதியப்பட்டு இருக்கிறது.

1865-க்கு முன்னாடி இருக்கின்ற பத்திரங்கள் ஜமின் மற்றும் இனாம் தாரருடைய மேல்வாரி உரிமை சம்மந்தப்பட்ட பத்திரங்கள் அவை நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது.

எனவே நீதிமன்றத்தில் பதியப்பட்ட பத்திரங்கள் எல்லாம் நீதிமன்ற ஆவண காப்பகங்களில் தேடிப் பார்த்து இருக்கின்ற பத்திரங்களின் மெய்த் தன்மையை உறுதிசெய்து கொள்ளலாம்.

1865-க்கு பிறகு ஆன பத்திரங்களை எல்லாம் பத்திரப் பதிவுத்துறையில் உறுதிசெய்து கொள்ளலாம்.

இறுதியாக இப்பொழுது இருக்கின்ற பத்திரங்களுக்கெல்லாம் முதல் தாய்ப்பத்திரம் தமிழ்நாட்டில் 1865-ம் ஆண்டு வரை தான் இருக்கும் என்பதை மனதில் வைத்திருங்கள்.
தங்களுக்கு உபயோகமாக இல்லை என்றாலும், மற்றவர்களுக்காவது, தயவுசெய்து பகிரவும்.

 

-Syed Basheer

Scroll to Top