மெட்ரோ ரயில், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள்… சென்னையுடன் போட்டி போடும் திருவள்ளூர்!

 

thiruvalur districtthiruvalur district

பொதுப் போக்குவரத்தின் அவசியம் உணர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தைத் திருவள்ளூர் வரை நீட்டிப்பதற்கான முயற்சியில் CMDA இறங்கியுள்ளது. இதனால் திருவள்ளூரில் வசிப்பவர்கள் எளிதில், குறைந்த நேரத்தில் சென்னைக்கு வந்து செல்ல முடியும்…

வேலை தேடி, பிழைப்பு தேடி சென்னைக்குப் படையெடுக்கும் மக்கள் கூட்டம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. எனவே, சென்னையின் எல்லையும் விரிந்து கொண்டே போகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளும் இதனால் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக முன்னேறி வளர்ச்சி கண்டு வருகின்றன.

அப்படி வளர்ச்சி கண்டுவரும் மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டம் முன்னிலையில் இருக்கிறது. ஒருகாலத்தில் கிராமப்புறங்களைப் போல இருந்த திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகள் இன்று வளர்ந்த நகரங்களைப் போல மாறியிருக்கின்றன. 30 ஆண்டுகளுக்கும் முன்பு இந்த மாவட்டத்தில் விவசாயம்தான் பிரதான தொழிலாக இருந்தது. ஆனால், இன்றைக்கு இந்த மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு, பல லட்சம் பேர் வேலை பார்க்கிற மாவட்டமாக உயர்ந்திருக்கிறது.

இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம், பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளையும், பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளையும் கொண்டு இந்த மாவட்டம் விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு வசதிகளையும், வாய்ப்புகளையும் பற்றி இனி பார்ப்போம்.

சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், சென்னை மெட்ரோ மேம்பாட்டு ஆணையத்தின் (CMDA) கீழ் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு வளர்ச்சியைக் கண்டு வருகிறது. விரிவடைந்துவரும் சென்னை நகர்ப்புற நிலப்பரப்பின் ஒரு பகுதியாக (satellite town) இருக்கும் திருவள்ளூர், அதன் முக்கியத்துவம் வாய்ந்த இருப்பிடம், சாதகமான முதலீட்டு சூழல் மற்றும் அதிகரித்துவரும் மக்கள் தொகை உள்ளிட்ட காரணங்களால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருக்கிறது.

சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூர் இருப்பதால், முக்கியத்துவம் உள்ள பகுதியாக மாறியிருக்கிறது. திருவள்ளூரில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் திருவள்ளூரில் சென்னை மெட்ரோ மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்ட உள்கட்டமைப்பு திட்டங்களும், முயற்சிகளும் ஏராளம்.

பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒன்று, தடையற்ற போக்குவரத்து. இதை உறுதி செய்யவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் திருவள்ளூரில் சாலை இணைப்பை மேம்படுத்து வதற்கு சென்னை மெட்ரோ மேம்பாட்டு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னுரிமை அளித்து செயல்படுத்தியுள்ளது.

சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை, திருவள்ளூர் நெடுஞ்சாலை மற்றும் பிற முக்கிய சாலைகள் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. இது திருவள்ளூர் மற்றும் சென்னை இடையேயான தொடர்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மற்ற அண்டை மாவட்டங்களோடும் சிறந்த போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், பொதுப் போக்குவரத்தின் அவசியத்தை உணர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை திருவள்ளூர் வரை நீட்டிப்பதற்கான முயற்சியிலும் சென்னை மெட்ரோ மேம்பாட்டு ஆணையம் இறங்கியுள்ளது. இது பயணிகளுக்கு நம்பகமான மற்றும் வசதியான போக்குவரத்து முறையை வழங்கும், பயண நேரத்தைக் குறைக்கும்.

மேலும், தனியார் வாகனங்களில் இருந்து பொதுப் போக்குவரத்துக்கு மாற மக்களை ஊக்குவிக்கும். மெட்ரோ ரயில் நீட்டிப்பு திருவள்ளூர் மற்றும் சென்னையின் பிற பகுதிகளுக்கான இணைப்பையும் கணிசமாக மேம்படுத்தும். இதையடுத்து திருவள்ளூரில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும் முயற்சி மேற்கொண்டுவருகிறது திருவள்ளூரின் இருப்பிடம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனெனில், சென்னை துறைமுகத்துக்கு அருகில்தான் திருவள்ளூர் மாவட்டம் இருக்கிறது இங்கு நிலம் கிடைப்பதற்கான சூழல் சாதகமாக இருப்பதால், தொழில்கள் மற்றும் வணிகங்களுக்கு சாதகமான இடமாகவும் உருவெடுத்துள்ளது.

திருவள்ளூரில் தொழில் பூங்காக்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் ஐ.டி மற்றும் ஆட்டோமொபைல் தொழில்கள் உட்பட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதே சமயம், அதையொட்டி அங்கு குடியேறும் மக்களுக்கு மலிவான மற்றும் தரமான வீட்டு வசதிகளை வழங்குவதற்காகவும் திருவள்ளூரில் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ஷாப்பிங் சென்டர்கள் போன்ற வசதிகளுடன்கூடிய ஒருங்கிணைந்த நகரங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது. கூடுதலாக, நிலையான வாழ்க்கை சூழலை உறுதி செய்வதற்காக குடிநீர் வழங்கல், கழிவுநீர் அமைப்புகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் நேரிலேயே பார்க்க முடிகிறது.

மேலும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு மாநிலத்தில் 5 சாட்டிலைட் நகரங்களை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தது. அதில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று.

இந்த சாட்டிலைட் நகரம் 37.74 சதுர கிமீ பரப்பளவும், 11 கிராமங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அம்பத்தூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, மாதவரம், பொன்னேரி உள்ளிட்ட 11 தாலுகாக்கள் இந்தத் திட்டத்தின்கீழ் வருகின்றன. இதன்மூலம் ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சாட்டிலைட் நகரம் உருவாக்கப்படுவதற்கான 11 தகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நிலப்பரப்பு அதன் உயரம், மற்றும் சரிவு, நிலத்தடி நீர், மக்கள் தொகை அடர்த்தி, சமூகப் பரிமாணம், கல்வி வசதி, சுகாதார வசதி, சாலை இணைப்பு, ரயில் இணைப்பு, சூழலியல் தரம், வெள்ள பாதிப்பு மற்றும் கட்டுமானங்கள் இல்லாத நிலத்தின் சதவீதம் ஆகியவை அந்தத் தகுதிகள் ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தத் தகுதிகள் அனைத்தும் இருப்பதால் அம்மாவட்டத்தில் சாட்டிலைட் நகரம் அமைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்

இப்படி திருவள்ளூரில் சென்னை மெட்ரோ மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்ட பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகள் மாவட்டத்தை செழிப்பான, பிரகாசமான நகர்ப்புற மையமாக மாறியிருக்கிறது.

 

மேம்படுத்தப்பட்ட சாலை இணைப்பு, வரவிருக்கும் மெட்ரோ ரயில் விரிவாக்கம், தொழில்துறை வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை திருவள்ளூரின் வளர்ச்சியைத் தூண்டி கணிசமாக முதலீடுகளையும் ஈர்க்க வழிசெய்திருக்கின்றன.

சென்னை மெட்ரோ மேம்பாட்டு ஆணையத்தின் இந்த முயற்சிகள், சென்னையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் அதே வேளையில், வசிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையையும் கொண்டுள்ளது.

திருவள்ளூரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தற்போதைய திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் சென்னை பெருநகரப் பகுதியின் வளர்ச்சிப் பாதையில் திருவள்ளூரை தவிர்க்க முடியாத முக்கிய பங்களிப்பாளராக மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Scroll to Top